Wednesday, 11 July 2012
வீட்டுமுற்றத்திலே அழகான மாடம் அமைத்து, அதனுள் துளசிச்செடியைக் குடியிருக்க வைத்து நாளும் அதன் அழகையும் மருத்துவக்குணத்தையும் அநுபவிக்கும் மக்கள் அநேகர். மூலிகைகளில் அரசி என்று போற்றப்படும் துளசி இடியைத் தாங்கும் சக்தி படைத்தது. அதனால்த் தான் முற்றத்தை இச்செடி அலங்கரிக்கின்றது. இதனைவிட இச்செடி ஓசோன் வாயுவை வெளியிடுவதாகவும் விஞ்ஞானம் பகர்கின்றது. முற்றத்திலே அதன் இலைகளைப் பறித்துப் பச்சையாகவே உண்டு உடல்நோய் தீர்ப்போர் அதன் மருத்துவக் குணத்திற்குச் சாட்சியாக அமைகின்றார்கள். அப்பாடா இந்தத் துளசிக்குள் இத்தனை மருத்துவக் குணங்களா! என்று நாம் ஆச்சரியப்படும் வண்ணம், இது மருத்தவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதனை தெய்வீக மூலிகை என்றும் அழைக்கின்றார்கள். ஏனென்றால், இந்துமதத்தவர்கள் இலட்சுமி தேவியின் அம்சமாகக் கருதி இதனை வழிபடுகின்றார்கள். இதன் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது. இதற்கு கிருஷ்ணதுளசி, இராமதுளசி, அரி, மாலலங்கர், துளவு, திருத்துளாய், குல்லை, வனம், விருத்தம், துழாய் எனப் பல பெயர்கள் உண்டு. இதில் பலவகைகள் உண்டு. அவை, கருந்துளசி, நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, முள்துளசி, கல்துளசி போன்றவையாகும். இதன் இலை, தண்டு, பூ, வேர் போன்ற அனைத்துப் பாகங்களும் மருத்துவக்குணத்தைக் கொண்டிருக்கின்றன. .
துளசிச் செடி உருவான ஒரு ஆன்மீகக் கதையும் அறியப்படுகின்றது. துளசி என்பவள் விநாயகரை மானசீகமாகக் காதலித்த ஒரு தேவலோகக் கன்னியே ஆவார். தன் மனதுள் கலந்திருக்கும் காதலை, விநாயகரிடம் வெளிப்படையாக எடுத்துரைத்தார். தன் தாயைப் போன்ற பெண்ணையே நினைத்துநினைத்துக் காலம் முழுவதும் பிரம்மச்சரியம் காத்த விநாயகக் கடவுள் துளசியின் வேண்டுகோளை புறக்கணித்தார். '' திருமாலுக்கே சொந்தமான உன்னை யான் ஏற்றுக்கொள்ள முடியாது'' எனப் புறந்தள்ளினார். ஆனாலும், அதனை செவிசாய்க்காத துளசியை, விநாயகரும் ''செடியாகக் கடவது'' எனச் சாபமிட்டார். அதுமாத்திரமன்றி தன்னுடைய பூஜைக்கும் துளசியைத் தவிர்க்க வேண்டும் என ஒதுக்கிவைத்ததாகவும் ஐதீகம் பகர்கின்றது. இதன் விஞ்ஞானம் பற்றி மேலும் ஆராயவேண்டியுள்ளது.
இதன் மருத்துவக்குணங்களையும் எவ்வாறான நோய்களுக்கு இது மருந்தாக அமைகின்றது என்பதையும் கீழே பார்ப்போம்.
இது உடற்பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உடற்சூட்டைத் தணிக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் இதயம், இரத்தநாளங்கள், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றைப் பலப்படுத்துகின்றது. மனஅழுத்தம், நரம்புக்கோளாறு, ஞாபகசக்தியின்மை போன்றவற்றிற்கு உடனடிப் பலன்தரும் மருந்தாக அமைகின்றது.
பன்றிக்காய்சலுக்கும் மருந்தாக அமைகின்றது. துளசியும் சுக்கும்(வேர்க்கொம்பு) ஒன்றாக சேர்த்துக் கொடுக்கும் போது பன்றிக் காய்ச்சல் குணமடைவதாக சித்தமருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு(வேர்க்கொம்பு) 2 இலவங்கம்(கறுவா) சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமடையும்.
மனஅழுத்தம்:
துளசி இலையை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு வில்வஇலைச்சாற்றைக் கலந்து சிறிதளவு சூடாக்கி அருந்தினால், மனஅழுத்தம் தீரும்.
மாலைக்கண்:
கருந்தளசி இலையை நன்றாகக் கழுவி கசக்கிச் சாறு எடுத்து இரண்டு கண்களுக்குள்ளும் இரண்டு துளிவீதம் காலையும் மாலையும் தவறாது 9 நாள்கள் விட்டுவர மாலைக்கண்நோய் குணமாகும்.
நெஞ்சுச்சளி:
கற்பூரவல்லிச்சாற்றுடன் துளசி இலைச்சாற்றையும் ஒன்றாகக் கலந்து சிறிதளசு சூடாக்கிக் காலை வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்தவர நெஞ்சுச்சளி குணமாகும்.
குளிர்காய்ச்சல்:
நீலத்துளசிச்சாற்றை இரண்டு தேக்கரண்டி எடுத்து சூடுநீரில் கலந்து 3 மணிநேரத்திற்கு ஒருமுறை குடிக்கக் கொடுத்தால் குளிரின் நிமித்தம் வரும் காய்ச்சல் ஓடிவிடும். காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டாலும் துளசியுடன் கொஞ்சம் வேர்க்கொம்பைத் தட்டிப்போட்டு கசாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் வருவது தவிர்க்கப்படும்.
மாதவிடாய் இரத்தப்போக்கு:
மாதவிடாயின் போது சில பெண்களுக்கு இரத்தம் கூடுதலாக வெளியேறும். இவர்களுக்கு வெற்றிலை, துளசியிலை, வில்வஇலை, மூன்றின் சாற்றையும் சரிசமமாக எடுத்து விளக்கெண்ணெய்(வேப்பெண்ணெய்); சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து காலையில் ஒவ்வொரு தேக்கரண்டி 48 நாள்கள் குடித்துவர இரத்தப்போக்குக் குறைவடையும்.
மந்தக்குணம்:
துளசி இலைகளை செம்புப் பாத்திரத்தில் இரவு ஊறவைத்துக் காலையில் அந்தத் தண்ணீரைப் பருகிவர மந்தக்குணம் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.
பல்நோய்:
துளசி, புதினா இலைகளை நிழலிலே காயவைத்து பவுடராக்கி இதனைக் கராம்புப் பொடியுடன் கலந்து பல்துலக்கிவர பல்நோய் குணமாகும்.
வாய்நாற்றம், வயிற்றுப்புண்:
துளசி இலையைக் கழுவி நாளும் நன்றாக மென்று உண்டுவர அதன் சாறு உள் இறங்கி வயிற்றுப்புண், அதனால் ஏற்படும் வாய்நாற்றம் போன்றவை அகலும்.
தேள் கொட்டினால்:
துளசி இலையைப் பறித்துக் தேள் கொட்டிய வாயில் வைத்துத் தேய்த்தால் விஷம் இறங்கிவிடும். வலியும் நீங்கும்.
இதயநோய்:
நல்ல துளசி இலைகளை எடுத்து கழுவிச் சுத்தம் செய்தபின் மென்ற உண்டு வரவேண்டும். இது இதயநோய்க்குச் சிறந்த மருந்தாக அமைகின்றது. இந்தத் துளசி விதைகளை எடுத்து, இதயம் உள்ள இடப்புறத்தில் தைக்கப்பட்டிருக்கும் சட்டைப்பையினுள் வைத்துக் கொண்டால் இதயவலி நீங்கும் என்று கூறப்படுகின்றது.
இத்தனை மருத்துவக்குணங்களும் பொருந்திய துளசிக்கு முற்றத்தில் மாடம் அமைத்து வணங்கிவருதல் எத்தனை சிறப்பும் நன்றி செலுத்தும் பண்பும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
ReF:- http://www.sangkavi.com/2010/09/blog-post_17.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment