சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந்திருந்த அவர்கள், அதைப் பொறுக்க முடியாமல் தமிழை 'நீச பாஷை' என்று இழித்துரைத்தனர். ஒரு அடிமையின் மொழி நீசமாகத்தானே இருக்க முடியும். தமிழனுக்கென்று ஏதாவதொரு மாண்பு இருந்து விட்டாலும் அவன் தன்னை உயர்ந்தவனாக எண்ணி தனது அடிமைத் தனத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்வானே! எனவே அவனது மொழியைக் கீழ்த்தரமான மொழியென்று மூளைச்சலவை செய்தனர்.
இந்த நீண்ட கால கட்டத்தின் இறுதியில்,1800களில், கால்டுவெல் என்ற, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அருட்தந்தை தமிழகம் வந்தார். தமிழ் கற்று, சமற்கிருதம் கற்று, தென்னிந்திய மொழிகளையும் கற்றுத் தௌிந்து, திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்றும், அது சமற்கிருதத்திலிருந்து உருவான மொழி அல்லவென்றும் ஐயமின்றி நிறுவினார். இதை ஒரு வெளிநாட்டினர் தான் முதலில் சொல்ல வேண்டியிருந்தது என்பதிலேயே, ஒட்டு மொத்த தமிழினமும் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் பிறகு வந்த சூரியநாராயன சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) தமிழைச் செம்மொழி என்று ஆய்ந்துரைத்தார். சமற்கிருதத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான தமிழை மீட்கத் தனித்தமிழே சிறந்த வழியென்று முனைந்து மறைமலை அடிகளார் 'தனித்தமிழ்' இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவநேயப்பாவாணரும் எண்ணற்ற அரும்பனிகளைச் செய்தார். தமிழின் மீட்சி தொடங்கியது. அதன் விளைவாக தமிழில் 50 விழுக்காடாக புழங்கி வந்த சமற்கிருதச் சொற்கள் தற்போது 20 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அந்த 20 விழுக்காடு அயல்மொழிச் சொற்களையும் அறவே நீக்கித் தமிழைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
அதேநேரம், தொல்காப்பியர் காலத்திலேயே இசைவளிக்கப்பட்ட, அயல் மொழிக்குரிய ஒலிகளைக் குறித்த, எழுத்துக்களையும் தவிர்ப்பது எனக்கு நல்லதொரு கொள்கையாகப் படவில்லை. நான் முன்வைக்கும், தன்னியலான தமிழின் வளர்ச்சித் திட்டத்திற்கு இது உவந்ததாக இருக்காது. இதைப்பற்றி அலசி மொழி விரிவாக்கம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.
இக்கட்டுரையை தொடரும் முன்பு ஒரு செய்தியை குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்று சமற்கிருதத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட இன்று ஆங்கிலத்தால் மிகுதியான பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகளின் பொருளாதார மேன்மையும், தமிழினிடத்தில் பார்ப்பனீயத்தால் ஏற்படுத்தப்பட்ட தம்மைப்பற்றிய தாழ்வு மனப்பாண்மையும் தான் இந்த ஆங்கிலக் கவர்ச்சிக்குக் காரணிகள். அதோடு தமிழின் மேன்மை, தொன்மை, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு பெருவாரியான தமிழிரிடத்தில் ஏற்படுத்தப் படாமையும் இந்த இழிவு நிலையின் மற்றொறு காரணி. நிற்க.
உலகிலுள்ள அனைத்து மொழியினங்களும் ஒரேமாதிரியான ஒலியமைப்புகளை தங்களது மொழிகளில் பயன்படுத்தவில்லை. பொதுவான ஒலிகள் பலப்பல இருந்தாலும் ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கென்றும் தன்னியலான ஒலிகளும் ஏராளம். இந்த தனித்தன்மைகள் அம்மொழியினங்கள் வாழ்ந்த இயற்கைச்சூழல், அச்சூழலில் வழ்ந்த பறவைகள், விலங்குகள் எழுப்பிய ஒலிகளின் அடிப்படையில் உருவானதாகும். இந்த மொழிகள் ஒவ்வொன்றும் நிறைவு பெற்றதாகவும் தமக்குத் தேவையான அனைத்து (அல்லது அனேக) ஒலிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் விளங்கின.
ஆனால், இந்த மொழியினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் போது தான் ஒவ்வொரு மொழியின் போதாமை உணரப்பட்டது. இன்றுள்ள எந்த ஒரு மொழியும் மற்ற அனைத்து மொழிகளின் அனைத்து பெயர் சொற்களையும் உச்சரிக்க வல்லமை அற்றதாகவே உள்ளது. அந்த வல்லமை ஒவ்வொரு மொழிக்கும் முகாமையான தேவை என்பதே எனது கருத்து. அந்த வகையில் தமிழும் அந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பது எனது விழைவு. இத்தகைய விரிவாக்கத்திற்கு தமிழும், தமிழ் சார்ந்த மொழிகள் தவிர ஏனைய அனைத்து உலக மொழிகளும் இசைவற்றதாகவே உள்ளன. அம்மொழிகளை விரிவாக்கம் செய்வதோ கற்பதோ எளிதல்ல. ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு, தமிழின் விரிவாக்கத்திற்கோ கற்பதற்கோ உகந்த முறையில் உள்ளது. நாம் அடுத்துக் காணப்போகும் மொழி பற்றிய செய்திகளில் இது தௌிவாகும்.
கட்டுரையைத் தொடரும் முன்பு ஒரு சிறு விளக்கம்: சீனத்தைச் சார்ந்த அனைத்து கீழை மொழிகளும் ஒலிகளச் சார்ந்த எழுத்துகளைக் கொண்டிருக்க வில்லை. அவை கருத்துகளைத் தான் வெளிப்படுத்து கின்றன. ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு வரிவடிவம் (எழுத்துவடிவம்). கருத்தின் அடிப்படையில் எழுத்துகள் அமைவதால் அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட உச்சரிப்புகளைக் கற்றல் இன்றியமையாதது. இயல்பாகவே, இம்மொழிகள் எல்லாம் மிகக் கடினமான மொழிகள். இம்மொழிகளும் விரிவாக்கத்திற்கு உவந்தவையல்ல. சீனமொழி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட மொழி. எனினும், இக்குடும்பம் ஒரு வளர்ச்சி யடையாத மொழிக் குடும்பமே. ஆதிகால மனிதர்கள் பட எழுத்துகளைப் பயன்படுத்தினர். அதையொத்த எழுத்துகள் தாம் சீன எழுத்தமைப்பும். ஓரெழுத்துப்பேச்சு (Mono Sylabic) காலத்திலேயே தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற இனம் தான் சீன மொழிக் குடும்பம். இக்குடும்ப மொழிகளில் ஒவ்வொரு புதிய கருத்திற்கும் (சொல்லிற்கும்) ஒரு புதிய வரிவடிவமும், உச்சரிப்பும் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். இது எளிதல்ல. தமிழும், ஏனைய உலக மொழிகளும் ஒலி சார்ந்த மொழிகள் என்பதாலும், நமது கட்டுரை அதை மையப்படுத்தியது என்பதாலும் சீன மொழிக்குடும்பம் பற்றிய இந்த விளக்கம் தேவைப்பட்டது. நிற்க.
ஒரு மொழியை கற்கின்றவர் மூன்று முகாமையான கூறுகளைக் கற்க வேண்டும். அவை முறையே;
1. எழுத்தும் அதன் ஒலியும்
2. சொல்லும் அதன் உச்சரிப்பும்
3. சொல்லின் பொருள்.
(இங்கே நான் கற்பது பற்றி எடுத்துக்கொண்டது எழுத, படிக்க என்ற நோக்கில் மட்டுமே.)
1. எழுத்தும் அதன் ஒலியும்
எளிமையானதாக இருக்க வேண்டும். கற்பதை எளிமைப் படுத்தும் நோக்கில், எண்ணிக்கையில் குறைவானதாக இருக்க வேண்டும் அல்லது, எழுத்துக்களை அமைக்கும் முறை அவற்றைக் கற்பது எளிதாயிருக்க வேண்டும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருக்க வேண்டும்.
உலகில் புழக்கத்தில் உள்ள அத்தனை சொற்களையும் முறையாக உச்சரிக்க வேண்டு மெனில் தேவையான மிகு அளவிலான எழுத்துகளும் அதற்குரிய ஒலிகளும் இன்றியமையாதது. ஆனால், மிகு அளவிலான எழுத்துக்கள், எழுத்தை உருவாக்குவது முதல், கற்பது, கணணியில் பயன்படுத்துவது உட்பட எண்ணற்ற சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே, முரன்பட்ட இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுக்கும் (அதாவது, மிகு எண்ணிக்கை, பயன்படுத்தலில் எளிமை) தீர்வு உண்டா எனில் உண்டு; அது தமிழுக்கே உள்ள சிறப்பு. இதைப்பற்றி பிறகு விரிவாக காணலாம்.
2. சொல்லும் அதன் உச்சரிப்பும்
எழுத்துக்களின் கூட்டு தான் சொல். அந்த எழுத்துகளுக்குரிய ஒலிகளின் சேர்க்கை தான் அந்த சொல்லின் உச்சரிப்பு. எழுத்துகளையும் அவற்றின் ஒலிகளையும் முறையாக கற்ற எவரும் சொற்களில் உள்ள எழுத்துகளை (அவற்றின் ஒலிகளோடு) கூட்டிப் படிக்கும் போது மயக்கமற்ற உச்சரிப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, எழுத்துகளுக்கு நிலையான ஒலிகள் இருப்பின் (அதாவது, இடத்திற்கு தகுந்தவாறு பிறழ்ன்று ஒலிக்காத தன்மை) மயக்கமற்ற உச்சரிப்பு இயல்பானதாகும். மிகு எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன் படுத்தும் போது அவ்வெழுத்துகளுக்குரிய நிலையான, மாறாத ஒலிகள் இயல்பாகிவிடுகிறது. இங்கு முகாமையாக நாம் உணரவேண்டியது என்னவென்றால் சொல்லின் உச்சரிப்பை, சிறப்பித்துக் கற்பிக்கத் தேவையில்லை. இது கற்றலின் சிக்கலிளுள்ள ஒரு பரிமானத்தை எளிதாக்கி விடுகிறது. எனவே, சொல்லைக் கற்கின்ற ஒருவர் சொல்லிற்குரிய எழுத்துகளைக் (Spelling) கற்றாலே போதுமானது.சரியான உச்சரிப்பு இயல்பாகவே வந்துவிடும்.
ஆங்கில மொழியை இங்கு ஒப்பு நோக்கினால் நான் சொல்வது எளிதாகப் புரியும். ஆங்கிலத்தில் மொத்தமும் 26 எழுத்துகளே யுள்ளன, அததற்கு ஒதுக்கப்பட்ட ஒலிகளோடு. இந்த குறைவான ஒலிகளை வைத்துக்கொண்டு வகைவகையான சொற்களை ஒலிப்பது இயலாத செயல். எனவே, ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளை மிகையேற்றம் (Over-Loading) செய்கின்றனர். எனவே, சொற்களைக் கற்கவேண்டிய ஒவ்வொருவரும் Spelling மட்டுமில்லாது உச்சரிப்புகளயும் (Pronunciation) கற்கவேண்டியுள்ளது. இது ஆங்கிலம் கற்பதை மிகவும் கடினமாக்கி விடுகிறது. சான்றாக, Bus என்பதை 'புஸ்' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். Card என்பதை 'சார்டு' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆக, 26 எழுத்துகளயும் முறையாக பயின்ற பின்னும், எழுத்துகளைக் கூட்டி சொற்களைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து ஆங்கில சொற்களுக்கும், ஒரு ஆசானின் துணை இன்றியமையாதது. ஆனால், தமிழுக்கு இந்த அளவு கற்பித்தல் தேவையில்லை. இதைப்பற்றி பிறகு மேலும் பார்ப்போம். இந்தக் கட்டுரையாளர், சிறுவயதிலேயே சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றவர் என்ற முறையில் அது ஒரு Illogical (ஏரணமற்ற) மொழியென்பதை உணர்ந்தவர். அறிவியல் வழியாக முயன்று ஆங்கிலம் கற்க முடியாது. ஆனால், தமிழ் அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி.
3. சொல்லின் பொருள்
சொல்லின் பொருளைக் கற்பது ஒவ்வொரு மொழிக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை. வேர்ச்சொல்லின் அடிப்படையில் அமைந்த சொல்லமைதிகளக் கொண்ட சிறந்த மொழிகளுக்கு சொற்களையும் அதன் பொருளையும் நினைவில் இருத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. அந்த சிறப்பும் தமிழுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். தமிழில் அனைத்து சொற்களும் வேர்கொண்டு எழுந்தவையே. மற்றபடி, சொற்களைக் கற்றல் என்பது அனைத்து மொழிகளுக்குமான இன்றியமையாத பரிமாணம் தான்.
மொழி விரிவாக்கத்தைப் பற்றி கருதுகின்ற போது, எழுத்துகள் அதிகமாவதால், தமிழர்களைப் பொருத்தவரை, சொற்கள் மிகுதியாக வேண்டிய தேவை இல்லை. ஆனால், புதிய கலைச்சொற்களை உருவாக்கும் போது புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளும் பெருமளவில் உதவும். மொழி விரிவாக்கத்தின் முதன்மை தேவை என்னவெனில், மாற்று மொழிகளில் உள்ள அனைத்து பெயர்களையும் (பெயர்ச் சொற்களையும்) பிழையின்றி எழுதி உச்சரிப்பதே. இன்று நாம் அனைத்தும் தமிழில் என்று முன்னேற விரும்பும்போது இது ஒரு இன்றியமையாத தேவையாகும்.
நாம் மேலே கண்டவற்றிலிருந்து, உலகின் அனைத்து சொற்களின் மயக்கமில்லாத உச்சரிப்பை இயல்பாக்க நிறைய எழுத்துகளும் அதேநேரம் அவற்றைக் கற்பதை எளிமைப் படுத்தக்கூடிய தாகவும் அமையவேண்டும். இந்த வசதி தமிழுக்குள்ள இயல்பான தகுதியாகும். இதை நாம் எண்ணி எண்ணிப் பூரிப்படையலாம்.
தமிழில் பண்டைய முறைப்படி 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், இவற்றின் சேர்க்கையால் உருவான 216 (12*18 = 216) உயிர்மெய் எழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்ற வகைப்பாடே சுவையான அறிவியல் அடிப்படையினால் செய்யப்பட்டது. அ முதல் ஔ வரையிலான ஒலிகளை நாம் ஏற்படுத்தும்போது உதடுகள் ஒட்டாமல், மேலண்ணத்தை நாக்கு எங்கும் தொடாமல், காற்றுக் குழாயை அல்லது உதடுகளைக் குறுக்கியோ, விரித்தோ காற்றை ஒழுங்குபடுத்தி ஒலிக்கின்றோம். உயிருக்கு முதன்மையானது காற்றுதானே! எனவே, காற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கும் ஒலிகள் உயிரொலிகள் எனப்பட்டன. மெய்யொலிகளை உருவாக்கும்போது (க், ங்,ச் . . . . ) நாவானது மேலண்ணத்தைத் தொட்டோ அல்லது உதடுகள் ஒட்டியோ ஒலிக்க வேண்டியுள்ளது. அதாவது, காற்றைவிட உடலின் (மெய்யின்) பங்கே அதிகம். அவை மெய்யொலிகள் எனப்பட்டன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் ஒவ்வொரு உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது வகைவகையான புதிய ஒலிகளை உருவாக்க முடியும். அவ்வெழுத்துக்கள் (ஒலிகள்) உயிர்-மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. அத்தகையவை எத்தனை எழுத்துக்கள் என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்துகளின் எண்ணிக்கையைப் பொருத்தது.
இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு மெய்யெழுத்தும், ஒரு குறிப்பிட்ட உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது, அதன் மெய்யெழுத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றத்தை அடைகின்றன. சான்றாக, ஆ என்ற உயிரெழுத்தோடு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தொலிக்கும்போது, கா, ஙா, சா, நா, மா......என்ற உயிர்மெய்கள் ஒரே மாதிரியான மாற்றங்களைப் பெருகின்றன. ஒருசில தேவையான வேறுபாடுகளைத்தவிர, இது அனைத்து உயிரெழுத்துகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் நாம் உணரும் உண்மை என்னவெனில் உயிர்மெய்களுக்கு எழுத்து, வடிவங்களை உருவாக்குவதோ, கற்பிப்பதோ மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் உயிர்மெய்கள் கூட்டொலிகள் என்பதும் அவை உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துக்கள் தனித்தனியே கூடுவதால் உருவாவதாலும் இவற்றின் ஒலிகளை, அவற்றினோடு கூடிய எழுத்துக்களோடு நினைவில் இறுத்துவதும் எளிது. இவை மிகமிக முகாமையான உண்மைகள். தமிழின் சிறப்பின் அடிப்படையே இவைதான்.
பாவாணரின் வேற்சொல் ஆய்வு தமிழினத்தை வியக்க வைத்தது. தமிழ்ச்சமூகம் உலகின் தொன்மையானது. முதன்முதலில் பேசத்தொடங்கிய தமிழ்மாந்தன், ஒவ்வொரு சொல்லையும் காரணத்தோடே உருவாக்கிக் கையாண்டிருகின்றான். அதோடு சங்கம் வைத்து ஆய்ந்து செம்மைப் படுத்தப்பட்ட மொழி தமிழ் என்பதும் இச்சிறப்புகளின் அடிப்படை.
மீண்டும் ஆங்கிலத்தை ஆய்வு செய்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் அவற்றிற்குரிய அடிப்படை ஒலிகளுமே உள்ளன. இந்த 26 எழுத்துக்களுமே ஒன்றிற்கொன்று எந்த தொடர்பும் அற்ற தனித்தனி எழுத்து, ஒலிகளே. எனவே, இம்மொழியை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், எத்தனை புதிய எழுத்துகள் தேவையோ அத்துனை எழுத்துகளுக்கும் புதிய வரி (எழுத்து) வடிவங்களை உருவாக்க வேண்டும். அவையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தனித்தனி வடிவங்களாகத்தான் இருக்க முடியும். (இல்லையென்றால் ஆங்கிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பே மாறிவிடும்.) இவற்றின் வடிவங்களையும் ஒலிகளையும் உருவாக்குவதும் கற்பதும் ஒப்பீட்டளவில் தமிழைவிட மிகமிகக் கடினமானதாகும். எல்லாவற்றையும்விட முகாமையான செய்தி என்னவென்றால் அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட, ஆங்கிலம் போன்ற, மொழிகளை கணணியில் பயன்படுத்துவது இயலாததாகிவிடும். ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு கணணி பயன்பாட்டுக்கு மிகவும் உவந்ததாக உள்ளது. உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய் உருவாக்கப் படுவதால் கணணியின் விசைப் பலகையில் உயிரெழுத்துகளுக்கும், மெய்யெழுத்துகளுக்கும் மட்டும் விசைகள் இருந்தாலே பொதுமானது. தற்போதுள்ள முறைப்படி, 12+18 = 30 விசைகளே போதுமானது. உற்று நோக்குங்கால், தமிழின் எழுத்துமுறை ஏதோ கணணிக்கென்றே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இப்படித் தொன்மையான மொழியாக இருப்பினும், தமிழ் அரியபல மேன்மைகளைப் பெற்றிருக்கும்போது, இதன் விரிவாக்கம் பற்றிய தயக்கம் ஏன்?
கட்டுரையைத் தொடரும்முன்பு ஒரு விளக்கம் அளிப்பது தேவையாகிறது. தமிழ் ஒரு அறிவியல் மொழிதான். கணணி பயன்பாட்டுக்கு உவந்ததுதான். ஆனால், கணணியில் தட்டச்சு செய்யும்போது பெரும்பாலான எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளை அழுத்த வேண்டியுள்ளதே (அதாவது உயிரும், மெய்யும்) . அதனால், ஒரே கருத்தை கணணியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சேற்றும்போது தமிழுக்கு கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியிருக்குமே என்று கேட்கலாம். அது தான் இல்லை!!!! எப்படி? ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் அதிக எழுத்துக்களைக் கொண்ட நீண்ட சொற்கள். ஆனால், தமிழில் பெரும்பாலான சொற்கள் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட சிறிய சொற்களே. இது எதனால் எற்பட்டது என்றால், மீண்டும், ஆங்கிலத்தின் எழுத்துப் பற்றாக்குறைதான். இதைக் கணித ஆய்வு வழியாக விளக்குகின்றேன்.
மூன்றெழுத்து சொற்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துகளிலிருந்து ஒவ்வொரு முறையும் வெவ்வேறான 3 எழுத்துக் குழுக்களை (Combinations) எடுத்து அவற்றை வெவ்வேறாக இடவமைதி (Permutations) செய்து மேலளவாக எத்தனை சொற்களை உருவாக்கமுடியும் என்றால், அவை மொத்தம் 15,600 மட்டுமே. அதே நேரம் தமிழில் 247 மொத்த எழுத்துக்களிலிருந்து 1,48,86,690 எண்ணிக்கையான 3 எழுத்து சொற்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த இரண்டு மொழிகளிலுமே இந்த எண்ணிக்கை களிலிருந்து மிகச்சிறிய விழுக்காடு தான் பயன்படு சொற்களாகும். ஏனென்றால் அத்துனை சொற்களுக்கும் சொற்களுக்கான ஓசையமைதி இருக்காது; வேர்ச்சொல் தொடர்பும் இருக்காது. இங்கு நாம் காணவேண்டியது வாய்ப்புகளைப் பற்றியதுதான். குறைந்த எழுத்துகளையுடைய ஆங்கிலத்திற்கு சிறிய சொற்களுக்கான வாய்ப்புகள், ஒப்பீட்டளவில், தமிழைவிட மிகமிகக் குறைவு. ஆகவே, ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் நீண்ட சொற்களே. சான்றாக, சிலவற்றைப் பார்ப்போம்.
Complication சிக்கல்Beauty அழகுStop நில்Compettition போட்டிCompare ஒப்பிடுListen கவனிStatue சிலைUncomparable ஒப்பற்றGo போDifficulty கடினம்Situation சூழ்நிலைSilence அமைதிSound ஒலிComfort வசதிExhibition காட்சிShadow நிழல்Doubt ஐயம்Place இடம்Concentration கவனம்Install நிறுவுHouse வீடுCome வாGovernment அரசுJustice நீதி
மேலும், ஓரெழுத்துச் சொற்கள் இந்த இரண்டு மொழிகளிலும் எத்துனை உள்ளன என்று பார்த்தாலே விளங்கிவிடும். ஆங்கிலத்தில் ஓரெழுத்துச் சொற்கள் இரண்டே இரண்டு தான். அவை A (ஒரு), I (நான்) என்பன. ஆனால், தமிழில் எத்துனை என்று பாருங்கள்.
நீ, வை, கை, தை, போ, வா, கோ, மா, மை, பா, நா, பை, தா, தீ, ஈ, ...............
இந்தப் பட்டியல் முடிவானதல்ல. இதற்கு இணையான ஆங்கில சொற்கள் அனைத்தும் பல்லெழுத்துச் சொற்களே. ஆக, சராசரியாக, ஒரே கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேற்றும் போது, ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறைவான விசையழுத்தங்களே தேவைப்படும் என்பது உண்மை. அதோடு, தமிழ் மென் பொருளில் சுயமாக புள்ளியிடும் வசதியும் உண்டு. நிற்க.
இக்கருத்துக்கு உரம் சேர்க்க, திருக்குறளையும், அதன் ஆங்கில மொழியாக்கமும் (கவிதை வடிவிலேயே, G. U. Pope) ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். இங்கு சான்றாக எடுத்துக் காட்டும் குறள், நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய எளிய குறளே.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. (35 எழுத்துக்கள்)
The loveless to themselves belong alone;The loving men are others' to the very bone. (68 எழுத்துக்கள்)
வேறு ஏதாவதொரு சொற்றொடரை மொழிபெயர்த்தாலும் இதே போன்ற முடிவே கிடைக்கும். (34 எழுத்துக்கள்)If any different sentence is translated, similar result would be arrived at. (62 எழுத்துக்கள்)
ஆக, நான் முன்பே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியர் இசைவளித்த ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துகளைக்கூட தவிர்ப்பது முறையன்று. பார்ப்பனீயத்தின் மீதுள்ள வெறுப்பால் தமிழை முடக்குவது எள்ளளவும் சரியன்று. அழகிய தமிழின் தூய்மையைக் காப்பதாக எண்ணி, தமிழை தேக்கி வைப்பது ஒரு அடிப்படை வாதமே. அடிப்படை வாதங்கள் முன்னேற்றத்தின் எதிரிகள்.
உலகின் அனேக மொழிகள் விரிவாக்கத்திற்கு இயைந்த மொழிகள் அல்ல. தமிழுக்கு மட்டுமே இந்தத் தகுதியுண்டு. விரிவாக்கதின் மூலம் தமிழை உலகின் முதன்மை மொழியாக்க முடியும். அதற்குரிய அத்துனை தகுதிகளும் தமிழுக்குண்டு.
மொழி விரிவாக்கம் பற்றிய கருத்தை ஒரு சான்றோடு விளக்குவோம். ஆடுகள் தமிழ் மண்ணிற்குரிய விலங்கு. இருந்தும் ஆடு கத்தும் ஒலியை தமிழில் எழுத முடியாதென்பதே வருந்தக்கூடிய செய்தி. தற்போது ஆடு கத்துவதை 'மே' (ம்+ஏ = மே) என்றே எழுதுகின்றோம். இது May என்பதில் உள்ள ஏ தான். ஆனால், Man என்பதில் உள்ள ஏ தான் சரியான உச்சரிப்பு. அதற்குரிய உச்சரிப்பு (எழுத்து) தற்போது நம்மிடத்தில் இல்லை. மாறுபட்ட இந்த 'ஏ' க்கான ஒரு உயிரெழுத்தை உருவாக்கினால் இந்த புதிய 'மே' மட்டுமல்ல 18 புதிய உயர்மெய்கள் கிடைக்கும்.
சரி. எவ்வாறு விரிவாக்கம் செய்யலாம் என்று இப்போது பார்ப்போம். நமது குறிக்கோள், உலகிலுள்ள அனைத்து மொழியினங்களின் பெயர்ச் சொற்களை அவ்வினங்களின் உரிய உச்சரிப்புகளோடு எழுதிப் படிப்பதே. எனவே, அத்தகைய மொழிகளைக்கற்ற தமிழர்களின் உதவியோடு என்னென்ன ஒலிகள் தமிழில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். பிறகு, அப்புதிய ஒலிகளை உருவாக்க என்னென்ன புதிய உயிரொலிகள், மெய்யொலிகள் தேவையென்பதை ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஆய்வின்பின் அவ்வுயிர் மெய்களுக்குறிய, தமிழின் தன்மையோடு இயைந்த, புதிய வரிவடிவங்களை உருவாக்க வேண்டும். இதைச்செய்த உடனேயே பட்டியலிட்ட அனைத்து ஒலிகளுக்கும் வரிவடிவங்கள் எளிதாக உருவாகிவிடும்.
தற்போது உள்ள செந்தமிழின் அமைப்பில் உயிரும், மெய்யும் உயிர்மெய்யும் சேர்த்து 12+18+(12*18=216)+1 = 247 எழுத்துக்கள் உள்ளன. இதனுடன், எடுத்துக் காட்டுக்காக, 8 உயிரெழுத்துக்களையும், 2 மெய்களையும் சேர்த்தால் 20+20+(20*20 = 400)+1 = 441 மொத்த ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறமுடியும். வெறும் 10 புதிய ஒலிகளையும், வரி வடிவங்களையும் மட்டும் உருவாக்கி கிட்டத்தட்ட 200 பதிய ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறுவது என்பது எப்பேர்ப்பட்ட விந்தை! அதுதான் தமிழ். இதற்குரிய, புதிய எழுத்துக்களுக்கு, விசைகளாக விசைப்பலகையில் Num Lock பகுதியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தலாம்.
நான் மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டே. எத்தனை உயிர்கள், எத்தனை மெய்கள் என்பது மொழி வல்லுனர்கள் முடிவு செய்ய வேண்டியது. விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழுக்கு 'பெருந்தமிழ்' என்று பெயரிடலாம். ஐந்தாம் வகுப்பு வரை செந்தமிழும் அதன்பிறகு பெருந்தமிழும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். தமிழின் இலக்கணத்தில், இந்த விரிவாக்கத்தால், ஏதேனும் மாறுதல் வேண்டின் அதனையும் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் ஏற்படுத்திய வட எழுத்துக்கள் இப்பெரும் விரிவாக்கத்தின் ஒரு சிறிய அங்கமாக இருக்கும். பெருந்தமிழ் என்பதற்கு பதிலாக "உலகத்தமிழ்" என்றும் பெயரிடலாம்!
இக்கட்டுரையாளர் ஒரு மொழி வல்லுனரல்லர், ஒரு இயற்பியல் அறிஞர் தாம். ஆனால், அறிவியல் கண்ணோட்டத்தில் மொழியை அனுகும்போது, மேற்குறிப்பிட்ட தமிழின் 'வியத்தகு' மேண்மைகள் புலப்பட்டன. இத்தகைய விந்தை மொழியை மேலும் செழுமையுறச் செய்ய வேண்டியது, இந்தத் தலைமுறையின் கடப்பாடு அல்லவா? இக்கட்டுரையின் நோக்கம், அந்தத் திசையில், இன்றியமையாததொரு தருக்கத்தை ஏற்படுத்துவது தான். காலம் தாழாமல் அப்படியொரு தருக்கம் தொடங்கினால் தமிழும், தமிழுலகமும் மேன்மையடையும். இணையத் தமிழ் அறிஞர்களும், மாநாட்டுக் குழுக்களும் இக்கருத்துக்களை பரிசீலிப்பர் என்று கருதுகிறேன். தமிழுக்கு Unicode ல் உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்குமான குறியீடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கோப்புகளை சேமிக்க மிகையான இடமும், அவற்றைக் கையாள மிகையான கணணி நேரமும் தேவை என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அனைத்து எழுத்துக்களுக்கும் தனித்தனி குறியீடுகள் கொடுக்கப்பட்டால், இடத்தேவையும், கையாளும் நேரமும் குறையும் என்பது தமிழை மட்டும் வைத்துப்பார்த்தால் உண்மையே. ஆனால், தற்போதிருக்கும் முறையிலேயேகூட ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகையான இடங்களும், கையாளும் நேரமும் தேவையில்லை என்ற உண்மையை, இக்கட்டுரையின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளேன்.
வெல்க தமிழ்
- முனைவர்.வே. பாண்டியன்
தமிழின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை!
ReplyDelete